தர்மசாலா: இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே 5வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. தர்மசாலா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, தொடக்க வீரர்களான பென் டக்கெட் மற்றும் ஜாக் கிராலி களம் இறங்கினர். இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் இந்த கூட்டணியே சிறுதி நேரம் களத்தில் நிலைத்தது. 64 ரன்கள் சேர்த்த இந்த கூட்டணியை குல்தீப் யாதவ் பிரித்தார். பென் டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து, சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது, இங்கிலாந்து அணி. குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சு முக்கிய விக்கெட்களைக் கைப்பற்றயது. ஜாக் கிராலி 79, ஒலி போப் 11, ஜானி பேரிஸ்டோவ் 29, ஸ்டோக்ஸ் 0 என இங்கிலாந்து அணியின் மொத்த பேட்டிங் வரிசையையும் தனது சுழலுக்கு இரையாக்கினார், குல்தீப். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் 5 விக்கெட்களையும், அஷ்வின் 4 விக்கெட்களையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல் நாள் முடிவிலேயே, இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை சேர்த்தது. ஜெய்ஸ்வால் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். களத்தில் ரோகித் - கில் கூட்டணி இருந்தது.