குவாலியர்:இந்தியா - வங்கதேசம் இடையே 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரின் முதலாவது ஆட்டம், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இன்று தொடங்கியது. இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
128 இலக்கு:இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி, வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகினர். முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக மெஹிதி ஹசன் மிராஸ் 32 பந்துகளில் 3 பவுண்டரி உட்பட 35 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இதற்கு அடுத்தபடியாக வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 27 ரன்கள், டஸ்கின் 12 ரன்கள், ரிஷாத் ஹொசைன் 11 ரன்கள் எடுத்தனர். இவர்களைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை.
இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மயங்க் யாதவ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையும் படிங்க:மகளிா் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா..6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!
அதிரடியாக விளையாடிய இந்தியா:இதனை தொடர்ந்து 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களான அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்சனும் வங்கதேச அணியின் பவுலர்களின் பந்து வீச்சை பவுண்டரிக்கு சிதறடித்தனர்.
இதில் அபிஷேக் சர்மா 16 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார். அவருக்கு பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். அவர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடித்து 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முஸ்தபிஸுர் ரஹ்மான் வீசிய பந்தில் ஜாக்கர் அலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து 29 ரன்கள் எடுத்து இருந்த சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இறுதியில் 4-வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த நிதிஷ் ராணாவும், ஹர்திக் பாண்டியவும் இறுதி வரை விக்கெட் இழக்காமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 11.5 ஓவர்களிலயே 3 விக்கெட்டை இழந்த இந்திய அணி 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது இந்திய அணி. இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 வரும் அக்-9ம் தேதி டெல்லியில் உள்ள டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெறவுள்ளது.