பாரீஸ்:33வது ஓலிம்பிக் விளையாட்டு திருவிழா கடந்த ஜூலை 26ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது நாளான இன்று (ஜூலை.29) நடைபெற்ற ஹாக்கி போட்டியில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா - அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, அர்ஜென்டினாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இருப்பினும் அர்ஜென்டினா அணியின் லுகாஸ் மார்டின்ஸ் ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் கோல் அடித்து அந்த அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். இதனால் இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
தொடர்ந்து கோல் அடிக்க எடுத்த இந்திய வீரர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய வீரர்களால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. இதனால் தோல்வியின் விளிம்பிற்கு செல்லும் நிலைக்கு இந்திய அணி சென்றது. பெனால்டி வாய்ப்பு உள்பட இந்தியாவுக்கு கிடைத்த 10 முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.