சென்னை: துர்நாற்றம் வீசும் கழிவறையை சுத்தம் செய்யாமல், பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்திய தனியார் விமான நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2023 ஆம் ஆண்டு நானும், எனது மனைவி லோபோ முத்ராவும் மும்பையில் இருந்து சென்னைக்கு தனியார் விமானத்தில் பயணம் செய்தோம்.
அப்போது, பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் விமானத்தின் கழிப்பறையில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. அதாவது, இருக்கையில் அமர முடியாத அளவுக்கு துர்நாற்றம் இருந்தது. ஆஸ்துமா நோயாளியான தனது மனைவிக்கு மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் வாந்தி ஏற்பட்டது. மிகவும் சிரமமாக இருப்பதால் கூடுதல் பணம் செலுத்த தயாராக இருப்பதாகவும், முன் இருக்கையை ஒதுக்கும்படி விமான பணியாளர்களிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் அதை நிராகரித்து விட்டனர்.
தொடர்ந்து வலியுறுத்தியதால், 'விருப்பம் இருந்தால் பயணம் செய்யுங்கள், இல்லாவிட்டால் விமானத்தில் இருந்து கீழே இறங்குங்கள்' என விமான பணியாளர்கள் காட்டமாக தெரிவித்தனர். துர்நாற்றம் காரணமாக விமானத்தில் வழங்கிய உணவை கூட சாப்பிடவில்லை. அதனால், மிகுந்த சிரமத்தை ஏற்படுத்திய விமான நிறுவனத்தின் சேவை குறைபாட்டுக்காக 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாலியல் குற்றங்களுக்கு எதிரான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!
இந்த மனுவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, விமான நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர்களின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. விமான நிறுவன விவகாரத்தை பொறுத்தமட்டில் மனுதாரர்கள் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் மூலம் இழப்பீடு கோர முடியாது. எனவே, மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த ஆணையம், 'விமான நிறுவனம் கழிப்பறையை சுத்தமாக பராமரிக்காத காரணத்தினால் மனுதாரர்கள் பயணத்தின் போது மிகுந்த சிரமத்தை சந்தித்துள்ளனர். கழிப்பறையை சுத்தமாக பராமரிக்காததும், ஒரு சேவை குறைபாடு தான் என்பதால் மனுதாருக்கு இழப்பீடாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விமான நிறுவனம் வழங்க வேண்டும். வழக்கு செலவாக ரூ.10 ஆயிரத்தையும் சேர்த்து வழங்க வேண்டும்' எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.