சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ’ரெட்ரோ’ (Retro) திரைப்படம் வருகிற மே 1ஆம் தேதி வெளியாகிறது. கார்த்திக் சுப்பராஜ் - சூர்யா என எதிர்பாராத கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் அறிவிப்பு போஸ்டரில் இருந்தே எதிர்பார்ப்பு எகிற தொடங்கி விட்டது. இப்படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாரயணன் இசையமைக்க, ஷ்ரேயாஸ் கிருஷ்ணா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் படத்தின் டைட்டில் ரெட்ரோ என அறிவித்த படக்குழு, மே 1ஆம் தேதி படம் வெளியாக இருப்பதால் வித்தியாசமான புரோமோஷன் யுக்தியை பயன்படுத்தி வருகிறது.
இதுவரை படத்திலிறுந்து வெளியான அறிவிப்பு வீடியோக்களை படம் பிடித்த விதம் குறித்து காமிக் வடிவில் தொடர்ந்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் பதிவிட்டு வருகிறது. இணையத்தில் இந்த முயற்சி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்பு டீசர் உருவான விதத்தை காமிக் வடிவில் பதிவு செய்திருந்தார்கள். தற்போது ரெட்ரோ படத்தின் டைட்டில் டீசரில் இடம்பெற்றிருந்த சூர்யா-பூஜா ஹெக்டே காதல் காட்சியை படம் பிடித்தவிதம் பற்றி காமிக்ஸாக பதிவிட்டிருக்கிறார்கள்.
What we thought would take much longer was wrapped up before 7 PM, thanks to the quick thinking of our technical team and the actors' impeccable timing. This is how one of the most stunning shots in the “Love Teaser” was created.#RetroFromMay1 #LoveLaughterWar ❤️🔥@Suriya_Offl… pic.twitter.com/c4qhC0aJxC
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) February 17, 2025
படத்தின் துணை இயக்குநர் கூறியதாக 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் காமிக் வடிவில் பகிர்ந்து அந்தப் பதிவில், ”எங்களது முதல் திட்டம் மிகவும் எளிமையானது. நாங்கள் வாரணாசியை அடைந்ததும் அங்கு இரண்டு காட்சிகளை படம் பிடிப்பது, அதில் ஒன்று சூரியன் மறையக்கூடிய மாலை வேளையில் எடுக்கப்பட வேண்டும். எல்லாம் சரியாகதான் சென்றது ஆனால் விதியின் திட்டம் வேறொன்றாக இருந்தது.
அன்று முதல் காட்சியை எடுப்பதற்கே நிறைய நேரம் போய்விட்டது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட முதல் நாள் படப்பிடிப்பு தாமதமாகிவிட்டது. அப்போது எங்களின் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ், ”முதலில் திட்டமிட்டபடி பகல் நேரத்தில் மட்டும்தான் படப்பிடிப்பு இருக்கும் என்பதால், இரவு நேர படப்பிடிப்புக்கென்று கூடுதலான லைட்கள் கொண்டு வரவில்லை" என கூறினார்.
அதன் பிறகு அவரே ஒரு அற்புதமான ஐடியாவுடன் வந்தார். 100 முதல் 200 அகல்விளக்குகளை வைத்து அந்த இரவு காட்சிக்கு தேவையான லைட்டிங்கை செட் அப் செய்தார். சூர்யா வரும்போது எல்லாம் அமைதியாக இருந்தது. அவர் அவருக்கான வசனங்களைப் பார்த்துவிட்டு அந்தக் கதாபாத்திரமாக மாறி ஒரே டேக்கில் அந்தக் காட்சியை நடித்து முடித்துவிட்டார். பூஜாவின் உணர்வுப்பூர்வமான நடிப்பு அந்த காட்சிக்கு ஆழத்தைச் சேர்த்தது.
இந்த காட்சி இரவு நீண்ட நேரம் செல்லும் என நினைத்தோம். ஆனால், 7 மணிக்கு முன்பே இந்தக் காட்சியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. எங்கள் தொழில்நுட்பக் குழுவின் இந்த உடனடி யோசனைக்கு நன்றி. இப்படிதான் படத்தின் டைட்டில் டீசரில் வரும் அந்தக் காதல் காட்சி உருவானது.” எனப் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ”அரசுக்கு எதிராக கேள்வி கேட்பவர்கள் மீது முத்திரை குத்தப்படுகிறது”... ஆவணப்பட வெளியீட்டில் பா ரஞ்சித் பேச்சு!
ரெட்ரோ திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இந்த மாதிரியான காமிக்ஸ் கதைகள் தொடர்ந்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டி, கொச்சி என பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. சூர்யாவிற்கு வெற்றி தேவைப்படும் நேரத்தில் இப்படம் வெளியாவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.