ஆன்டிகுவா: 9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆன்டிகுவாவில் இன்று (ஜூன்.22) நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷான்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் இன்னிங்சை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 39 ரன்கள் சேர்த்தனர்.
ரோகித் சர்மா 23 ரன்கள் குவித்து ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் கேட்ச்சாகி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், மற்றொரு தொடக்க வீரர் விராட் கோலியுடன் இணைந்து அதிரடி காட்டத் தொடங்கினார். இதனிடையே விராட் கோலி தனது பங்குக்கு 37 ரன்கள் குவித்த கையோடு தன்சின் ஹசன் ஷாகிப் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் நாயகன் சூர்யகுமார் யாதவ் இன்றைய ஆட்டத்தில் வெறும் 6 ரன்கள் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனிடையே களமிறங்கிய ஷிவம் துபே, ரிஷப் பன்டுடன் இணைந்து அணியின் ரன் வேகத்தை உயர்த்தினார். இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி அணியின் ரன் வேகத்தை உயர்த்தினர்.
ரிஷப் பன்ட் தன் பங்குக்கு 36 ரன்களும், அவரைத் தொடர்ந்து ஷிவம் துபே 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். வங்கதேச பந்துவீச்சை சிதறடித்த ஹர்திக் பாண்டியா, ஏதுவான எல்லைக் கோட்டுக்கு சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக அனுப்பி குழுமி இருந்த இந்திய ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து உள்ளது. ஹர்திக் பாண்டியா அரைசதம் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். வங்கதேசம் அணி தரப்பில் தன்சின் ஹசன் ஷாகிப் மற்றும் ரிஷாத் ஹூசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஷகிப் அல் ஹசன் 1 விக்கெட்டும் வீழத்தினர். 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்கை நோக்கி வங்கதேசம் அணி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க:"நடைமேடை சீட்டு உள்ளிட்ட ரயில் நிலைய சேவைகளுக்கு வரிச்சலுகை! பால் கேன், அட்டை பெட்டிக்கு 12% ஜிஎஸ்டி"- நிர்மலா சீதாராமன்! - 53rd GST Council meet