பார்படோஸ்:9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. குரூப் மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் அதில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான இறுதி போட்டி பார்படோஸ் கென்சிங்டன் ஓவல் பிரிட்ஜ் டவுன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் இன்னிங்சை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தொடங்கினர்.
முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து பவுண்டரி அடித்து விராட் கோலி அதிரடி காட்டினார். மறுமுனையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பன்ட் வந்த வேகத்தில் கேசவ் மகாராஜ் பந்தில் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கஜிசோ ரபடா பந்துவீச்சில் ஹென்ரிச் கிளெசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனிடையே மற்றொரு தொடக்க வீரர் விராட் கோலியுடன் கைகோர்த்த அக்சர் பட்டேல் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.