இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில், டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்தியா முன்னிலை வகித்து வருகிறது.
இந்திய டென்னிஸ் அணி கடைசியாக 1964ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றபோது, 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது. அதன் பிறகு, சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய அணிக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போட்டியை நேரில் காண 500 பேருக்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம். தற்போதைய இந்திய அணியில் ராம்குமார் ராமநாதன், ஸ்ரீராம் பாலாஜி, நிக்கி பூனச்சா, யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில், அந்நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரர்களான ஐசம்-உல்-ஹக் குரேஷி மற்றும் அகில் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளணர். டேவிஸ் கோப்பை வரலாற்றில், இதுவரை பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வியே சந்தித்தது இல்லை.