தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

2007 போன்றதொரு சம்பவம்.. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்தியா! - IND Vs Pak Legends Champions

IND Vs Pak Legends Champions: 'லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2024' இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி.

இந்தியா சாம்பியன்ஸ் அணி வீரர்கள்
இந்தியா சாம்பியன்ஸ் அணி வீரர்கள் (Credit - Irfan Pathan X page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 10:36 AM IST

பர்மிங்காம்:முன்னாள் வீரர்கள் விளையாடும் 'உலக லெஜென்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2024' டி20 லீக் போட்டி இங்கிலாந்து நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடின.

இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணி, யூனுஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை எதிர்கொண்டது. வழக்கமாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதுபோலத்தான் இருந்தது நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டி.

இறுதிப் போட்டி:இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.

இதில் அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் களமிறங்கிய சோயிப் மாலிக் 41 ரன்கள் விளாசினார். அதற்கு அடுத்தபடியாக கம்ரன் அக்மல் 24 ரன்களும், சோஹைப் மக்சூத் 21 ரன்களும் விளாசினார். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் பெரியதாக அணிக்கு பங்களிக்கவில்லை.

இந்தியா அணி தரப்பில் அனுரீத் சிங் 3 விக்கெட்டுகளையும், வினய் குமார், ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் இர்பான் பதான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அபார வெற்றி:இதனையடுத்து 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய சாம்பியன்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக அம்பத்தி ராயுடு மற்றும் ராபின் உத்தப்பா களமிறங்கினர். இதில் ராபின் உத்தப்பா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 4 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

ராயுடு அதிரடி:இதனையடுத்து களமிறங்கிய குர்கீரத் சிங் - அம்பத்தி ராயுடுவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராயுடு, அரைசதம் விளாசிய நிலையில் அஜ்மல் வீசிய பந்தில் விக்கெட் இழந்து வெளியேற, அவரை தொடர்ந்து குர்கீரத் சிங் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. களத்தில் யூசுப் பதான் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் இருந்தனர். இதில் யூசுப் பதான் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். 16 பந்துகளை எதிர்கொண்ட அவர், 3 சிக்ஸர், 1 பவுண்டரி என 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 6 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. போட்டியின் கடைசி ஓவரை சோஹைல் கான் வீச அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசினார் இர்பான் பதான். இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா.

கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த கேப்டன் யுவராஜ் சிங் 15 ரன்களுடனும், இர்பான் பதான் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 2007 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளில் இடம்பெற்றிருந்த ஜாம்பவான் வீரர்கள் பலரும் இந்த அணிகளிலும் இடம்பெற்று இருந்தனர்.

அதனால் இந்த போட்டியும் அப்போது நடந்த இறுதிப் போட்டியை ஞாபகப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாக ரசிகர்களும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க:20 வயதில் தொடங்கிய பயணம் 22 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவு..ஓய்வு பெற்றார் ஜேம்ஸ் ஆண்டர்சன்!

ABOUT THE AUTHOR

...view details