ஐதராபாத்: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 22ஆம் தேதி பெர்த்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
ஏறத்தாழ 47 ஆண்டுகளுக்கு பின்னர் பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி மோசமான தோல்வியை எதிர்கொண்டது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
அடிலெய்டில் நடைபெறும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல் - இரவு ஆட்டமாக பிங்க் நிற பந்தில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் பெரிய மாற்றமாக டாஸ்மேனியாவை சேர்ந்த முதல் தர கிரிக்கெட் வீரர் பியூ வெப்ஸ்டர் (Beau Webster) அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். பெர்த்தில் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகிய மிட்செல் மார்ஷ்க்கு பதிலாக பியூ வெப்ஸ்டர் அணியில் சேர்க்கப்பட்டடு உள்ளதாக கூறப்படுகிறது.
மற்றபடி ஆஸ்திரேலிய அணியில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. 30 வயதான பியூ வெப்ஸ்டர் கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் தர போட்டியில் 900 ரன்கள் மற்றும் 30 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபிக்கு முன்னதாக நடைபெற்ற இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியிலும் பியூ வெப்ஸ்டர் விளையாடி உள்ளார்.
அந்த போட்டியில் 145 ரன்கள் குவித்த பியூ வெப்ஸ்டர், இரண்டாவது அதிகபட்ச ரன் குவித்த ஆஸ்திரேலியா வீரர் என்று அறியப்பட்டார். மற்றபடி ஆஸ்திரேலிய அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்த வீரர்களே தொடர்கின்றனர். முதலாவது போட்டியில் வாய்ப்பு வழங்கப்படாத ஸ்காட் போலந்துக்கு 2வது டெஸ்ட்டில் விளையாட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய உத்தேச அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலந்து, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லியோன், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.
இதையும் படிங்க: ஸ்ரேயாஸ் ஐயர் சம்பளம் இவ்வளவு தானா! அப்ப ரூ.26.75 கோடி எங்கப் போச்சு?