சென்னை: பொதுத்தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கான வரைவு அறிக்கையை சிபிஎஸ்சி (Central Board of Secondary Education) வெளியிட்டுள்ளது. அதில், 2026ஆம் கல்வியாண்டில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் எனவும், இதன் மீதான கருத்துக்களைப் பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் வரும் மார்ச் 9ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் எனவும் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2025ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் மார்ச் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனை 24 லட்சத்து 12 ஆயிரத்து 72 மாணவர்கள் 84 பாடத்தலைப்புகளில், 17 நாட்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக தேர்வுகள் நடத்த வெளியிடப்படும் கால அட்டவணையில் 32 நாட்கள் பள்ளி வேலை நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டு முறை தேர்வு:
அதன்படி 2026 ஆம் ஆண்டு முதற்கட்டமாக பத்தாம் வகுப்பிற்கு புதிய விதிமுறைகள் படி பொதுத்தேர்வு நடத்தப்படும். அதன்படி பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், மே 5ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நடத்தப்படும். இதில், 26 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். முதல் கட்டத்தில் 18 நாட்களும், இரண்டாம் கட்டத்தில் 16 நாட்களும் தேர்வு நடத்தப்படும்.
பிப்ரவரி மற்றும் மே என இரண்டு முறை மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளலாம். பிப்ரவரியில் எழுதும் தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்ணில் மனநிறைவு கொண்டால், மே மாதம் நடத்தப்படும் தேர்வை அவர்கள் எழுத வேண்டியதில்லை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் மதிப்பெண்களை உயர்த்த மே மாத தேர்வையும் மாணவர்கள் எழுதலாம்.
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பொதுத்தேர்வு நடைமுறையையே சிபிஎஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி புதிய பொதுத்தேர்வு விதிமுறை என்பது மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்வதற்கும், மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், மாணவர்கள் பாடங்களை புரிந்து கொண்டு படிக்கவும், மனப்பாடம் செய்வதை தடுக்கவும் இந்த புதிய தேர்வு முறை வழி வகுப்பதாக வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரைவு அறிக்கை தேர்வு விதிமுறைகள்:
மாணவர்கள் ஒரு பொதுத்தேர்வை எழுதலாம், விரும்பினால் இரண்டாம் முறையும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளலாம். முதற்கட்ட பொதுத்தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை என இரு முறையும் நடைபெற உள்ளது.
அறிவியல், கணிதம், சமூக அறிவியல், இந்தி, ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளை நிர்ணயிக்கப்பட்ட ஒவ்வொரு நாள் தேதியிலும் மாணவர்கள் எழுத வேண்டும். மாணவர்கள் தேர்வு செய்யும் விருப்பப் பாடங்களை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை எழுத புதிய விதிமுறை அனுமதிக்கிறது.
இதையும் படிங்க: மாநில அரசுகளின் அதிகாரம் பறிப்பு? சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க புதிய விதிமுறை!
அதேபோன்று, அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள் எளிது மற்றும் கடினம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படும். அதில், விரும்பும் வினாத்தாளை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அதில், கடினமான வினாத்தாளை தேர்வு செய்யும் மாணவர்கள் மட்டுமே, குறிப்பிட்ட பாடங்கள் சார்ந்த பிரிவில் பட்டப் படிப்புகள் மற்றும் தொடர்புடைய பிற உயர்கல்வி பிரிவுகளைப் பயில முடியும்.
மாணவர்களுக்கான தேர்ச்சி சான்றிதழ் என்பது இரண்டாம் கட்டத் தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்ணாகக் கருதப்படும். முதற்கட்ட பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பதினோராம் வகுப்பில் அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு அனுமதிக்கப்படும் மாணவர்கள் மீண்டும் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை தெரிவிக்கலாம்:
முதற்கட்ட பொதுத்தேர்வில் பிரதான பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூலை மாதம் நடத்தப்படக்கூடிய சிறப்பு பொதுத்தேர்வில் பங்கேற்று, தேர்வினை எழுதவும் அனுமதிக்கப்படுவார்கள் என புதிய வரைவு அறிக்கையில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும், வரைவு அறிக்கை மீதான கருத்துக்களைப் பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் வரும் மார்ச் 9ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம்" எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி வரும் கல்வி ஆண்டில் இருந்து இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கான வரைவு அறிக்கைக்கு சிபிஎஸ்சியும் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.