சென்னை: சென்னை மாநகர போலீசார் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகளிலும், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை தாம்பரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம், காந்தி சாலை, இரும்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருந்தன.
இந்த தகவலின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியிலும், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் நேற்று (பிப்ரவரி 25) இரும்புலியூர் மதுரவாயில் பைபாஸ் சாலை அருகே கையில் ட்ராலி பேக் உடன் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த ஒருவரைப் பிடித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்த நிலையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த நபர் மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த மோட்டிபுல் சேக் (30) என்பது தெரியவந்தது.
மேலும் அவர் வைத்திருந்த ட்ராலி பேக்கை போலீசார் கைபற்றி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் ட்ராலி பேக்கில் சுமார் 22 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ட்ராலி பேக்கில் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்கள், ஐடி ஊழியர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை! சிக்கிய மூவர்!
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஒடிசா மாநிலத்திலிருந்து ரயில் மூலம் தாம்பரத்திற்குக் கஞ்சாவைக் கடத்தி வந்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்களைக் குறிவைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!