திருநெல்வேலி: நெல்லையில் குடித்து விட்டு அடிக்கடி வம்புக்கு இழுத்து வந்த தந்தையை மகனே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரை கைது செய்துள்ள போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறை விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே அம்பேத்கர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (56). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் பார்த்திபனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் பார்த்திபன் தினமும் மது அருந்தி விட்டு தனது மகன் முத்து செல்வனை அடித்து தகாத வார்த்தைகளால் பேசி துன்புறுத்தவதை வழக்கமாக வைத்திருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், வழக்கம் போல நேற்று (பிப்.25) மதியம் பார்த்திபன் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது குடி போதையில் தனது மகன் முத்துவை வம்புக்கு இழுத்துள்ளார். எவ்வளவு சொல்லியும் முத்து செல்வனை விடாமல் பார்த்திபன் தொந்தரவு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் முத்து செல்வன் தந்தை பார்த்திபனை அருகில் கிடந்த அரிவாளை எடுத்து தலை மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதையும் படிங்க: காவல்நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. ஓய்வு பெற்ற ஆய்வாளர் மற்றும் 2 போலீசாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை!
இதில் பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கூடங்குளம் போலீசார் விரைந்து சென்று பார்த்திபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முத்துவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடித்து விட்டு தொந்தரவு செய்த தந்தையை மகனே வெட்டி கொலை செய்த சம்பவத்தால் கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடந்த இக்கொலை சம்பவம் கூடங்குளம் பகுதியில் காட்டுத்தீயை போல பரவியது. அக்கம் பக்கத்தினர் பார்த்திபன் வீட்டின் முன்பு குவிந்ததால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பார்த்திபன் வீட்டாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பார்த்திபன் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.