தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நடராஜனின் தரமான பந்துவீச்சு.. திருச்சியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு திருப்பூர் தமிழன்ஸ் தகுதி! - TNPL 2024 - TNPL 2024

TNPL 2024 , ITT VS TGC : நடராஜன் மற்றும் மான் பாஃப்னாவின் சிறப்பான ஆட்டத்தால் திருச்சியை வீழ்த்தி, 4வது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது திருப்பூர் தமிழன்ஸ் அணி.

இரு அணி வீரர்கள்
இரு அணி வீரர்கள் (Credit - TNPL)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 28, 2024, 9:53 AM IST

திண்டுக்கல்: தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 சீஸனின் கடைசி லீக் போட்டிகள் திண்டுக்கல் மாநகரிலுள்ள நத்தம் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று முதல் நடைபெற்ற முதல் டபுள் ஹெட்டரின் 2வது போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் 47 ரன்கள் வித்தியாசத்தில், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

தோல்வியடைந்த திருச்சி அணி தொடரிலிருந்து வெளியேறியது. முன்னதாக, இந்த சீஸனின் கோவை, சேப்பாக் மற்றும் திண்டுக்கல் அணிகள் ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் 4வது மற்றும் கடைசி இடத்தை உறுதி செய்யும் முக்கியப் போட்டியில் திருச்சி மற்றும் திருப்பூர் அணிகள் மோதின.

மான் பாஃப்னா அபாரம்:இதில் டாஸ் வென்ற திருச்சி கிராண்ட் சோழாஸ் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய திருப்பூர் அணி 67 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து சரிவை சந்திக்க, இந்த சீஸனில் முதன்முறையாகக் களமிறங்கிய மான் பாஃப்னா 7வது விக்கெட்டிற்கு கணேஷ் உடன் இணைந்து 84 ரன்கள் சேர்த்தார்.

இவ்விரு வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மான் பாஃப்னா 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இந்த சீஸனில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். திருச்சி அணியின் பௌலிங்கைப் பொறுத்தவரை அதிசயராஜ் டேவிட்சன் 4 விக்கெட்களைப் கைப்பற்றினார்.

இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது திருச்சி அணி, முக்கியப் பேட்டர்களின் விக்கெட்களை ஆரம்பத்திலேயே பறிகொடுத்தது அந்த அணி. அதாவது பவர் பிளேவிற்குள் டாப் 3 பேட்டர்கள் விக்கெட்களை இழக்க, 4வது விக்கெட்டிற்கு சஞ்சய் யாதவ் மற்றும் நிர்மல் குமார் இணைந்து 43 ரன்கள் சேர்த்தனர். அதன் பின் சஞ்சய் யாதவும் (16ரன்) ஜாஃபர் ஜமாலும் (0) திருப்பூர் கேப்டன் சாய் கிஷோரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர்.

அபார வெற்றி:திருப்பூர் அணியின் அபாரமான பந்து வீச்சால் 16.5 ஓவர்களில் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுளையும் இழந்தது திருச்சி அணி. இதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது திருப்பூர் தமிழன்ஸ் அணி. திருச்சி அணிக்கு அதிகபட்சமாக நிர்மல் குமார் 46 ரன்கள் விளாசி இருந்தார்.

திருப்பூர் அணி தரப்பில் நடராஜன் அட்டகாசமாக பந்துவீசி 3 ஓவர்களில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்களை சாய்த்தார். அவருக்கு பக்கபலமாக அஜித் ராமும் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் டி.என்.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக, ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி தகுதி பெற்றது. அதோடு திருச்சி மற்றும் நெல்லை அணிகளின் ப்ளே ஆஃப் கனவு கானல் நீராகி வெளியேறியது.

இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக்: பதக்கம் வெல்வாரா மனு பாக்கர்? 2வது நாளில் இந்திய வீரர்களின் அட்டவணை!

ABOUT THE AUTHOR

...view details