ஐதராபாத்: 2024 ஐபிஎல் சீசனில் கே.எல் ராகுல் தலைமையின் கீழ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி களம் கண்டது. மொத்தம் உள்ள 14 ஆட்டங்களில் தலா 7 வெற்றி, தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 7வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. தொடர் நடந்து கொண்டு இருக்கும் போதே கே.எல் ராகுலின் கேப்டன்சியின் மீது அணி நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
கே.எல் ராகுலின் கேப்டன்சி மீது தொடர்ந்து அணி நிர்வாகம் கேள்வி எழுப்பி வந்ததால் இரு தரப்புக்கும் இடையே முட்டல் மோதல் போக்கு இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கண்ட தோல்விக்கு கே.எல் ராகுலுடன் லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோங்கே மைதானத்தில் வைத்து கோபமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் அணிகளின் தக்கவைப்பு பட்டியல் வெளியானது. இதில் லக்னோ அணியின் தக்கவைப்பு பட்டியலில் கே.எல் ராகுலிடன் பெயர் இடம் பெறவில்லை. இரு தரப்பு சமரச பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு அணியில் இருந்து கே.எல் ராகுல் வெளியேற முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், லக்னோ அணியில் இருந்து என்ன காரணத்திற்காக வெளியேறினேன் என்பது குறித்து கே.எல் ராகுல் தன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.இது குறித்து பேசிய அவர், சமீப காலமாக டி20 பார்மெட்டில் விளையாடவில்லை என்றும் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பதே தனது இலக்கு என்றார்.