தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"மைதானமா இது.. வாழ்க்கையில இனி இங்க வரமாட்டோம்"- 2வது நாளாக தொடரும் சோகம்! - Afg vs NZ Test Cricket

மழையே பெய்யாமல் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், ஆப்கான் பயிற்சியாளரின் அதிருப்தி கருத்துக்களால் பிசிசிஐக்கு புது சிக்கல் உருவாகி உள்ளது.

Etv Bharat
The Greater Noida Sports Complex Stadium covered (AFP)

By ETV Bharat Sports Team

Published : Sep 10, 2024, 10:27 AM IST

நொய்டா:நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானங்கள் இல்லாத நிலையில், அந்நாட்டு அணி இந்தியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளில் விளையாடி வருகிறது.

அதன்படி ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டியை நடத்திக் கொள்ள கிரேட்டர் நொய்டா மைதானத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கியது. இந்நிலையில், நொய்டாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று (செப்.9) இரு அணிகளுக்கு இடையே முதல் நாள் ஆட்டம் தொடங்க இருந்தது. காலையில் இருந்து மழை பெய்யாததால் போட்டி நடைபெறும் என எதிர்பார்த்து இருந்த நிலையில், முதல் நாள் பெய்த மழையால் மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கி இருந்தது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

தொடர்ந்து மைதானத்தில் தேங்கிய நீரை வெளியேற்ற மைதான ஊழியர்கள் முயற்சித்தும் பலனளிக்கவில்லை. பந்து வீச்சாளர்கள் ஓடி வந்து பந்துவீசும் இடம் முழுவதும் மழைநீர் தேங்கி இருந்தது. மேலும், மைதானத்தின் முதல் 30 யார்டு சர்க்கிள் பகுதியில் பல இடங்களில் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டு அதில் தண்ணீர் புகுந்ததால் மைதான ஊழியர்களால் அதை வெளியேற்ற முடியாமல் போனது.

மைதானத்தின் மோசமான மழைநீர் வடிகால், போதிய முன் அனுபவம் இல்லாத மைதான ஊழியர்கள் உள்ளிட்ட காரணங்களால் முதல் நாள் ஆட்டம் முற்றிலும் தடைபட்டதாக ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து பேசிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி, ஆப்கான் கிரிக்கெட் வாரியத்திற்கும், மைதான நிர்வாகத்திற்கும் இடையேயான போதிய தொடர்புமின்மை மற்றும் நிர்வாகமின்மை உள்ளிட்டவையே இதற்கு காரணம் என்றார்.

மைதானத்தை ஆறு முறைக்கு மேல் போட்டி நடுவர்கள் ஆய்வு செய்த போதும் அது விளையாடுவதற்கு உகந்ததாக இல்லை எனத் தெரிவித்தனர். மேலும், நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி, ஆல்ரவுண்டர்கள் மிட்செல் சான்டனர், ரச்சின் ரவிந்திரா ஆகியோரும் மைதானத்தை ஆய்வு செய்த போது ஒரு பலனும் அளிக்கவில்லை.

மதியம் 2 மணி வரை மழைய பெய்யாத போதும் போட்டியை நடத்த முடியாமல் போனது இரு நாட்டு வீரர்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கடும் அதிருப்திக்குள்ளான ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனதன் ட்ராட், இது போன்று மோசமான மைதானத்தை இதுவரை பார்த்ததில்லை என்றும் இனி வாழ்க்கையில் இந்த மைதானத்திற்கு வந்து விளையாடப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஆப்கானிஸ்தன் கேப்டன், இந்தியாவை எங்களது சொந்த மண்ணாக கருதி கிரிக்கெட் விளையாட வருகிறோம், அடுத்த முறை பிசிசிஐ மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எங்களுக்கு நல்ல மைதானத்தை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து இரண்டாவது நாளாக மைதானம் ஈரத் தன்மையுடன் இருப்பதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பொள்ளாச்சியில் தேசிய அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி; தமிழக வீரர்கள் அசத்தல்! - National Level Taekwondo summit

ABOUT THE AUTHOR

...view details