ஐதராபாத்:இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கடுமையாக திணறியது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. நேற்று (நவ.22) ஒரு நாளில் மட்டும் 17 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இந்நிலையில், இன்று (நவ.23) இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அடுகளத்தில் நங்கூரம் போட முயன்ற அலெக்ஸ் கேரியை பும்ரா வெளியேற்ற அடுத்த ஓவரில் ஹர்சித் ரானா, ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் நாதன் லயனை வீழ்த்தினார்.
தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அபாரமாக பந்து வீசிய ஹர்சித் ரானா, எதிரணி வீரர்களை தனது பவுன்சர் பந்துகளால் திக்குமுக்காடச் செய்தார். இந்த இக்கட்டான சூழலுக்கு மத்தியில் மிட்செல் ஸ்டார்க் களமிறங்கினார். அப்போது ஹர்சித் ரானா வீசிய பவுன்சரில் ஸ்டார் சற்று தடுமாறினார்.
ஹர்சித் ரானாவின் தன்னம்பிக்கையை சீர்குலைக்க திட்டமிட்ட ஸ்டார்க், மைதானத்தில் வைத்து, "உன்னை விட வேகமாக பந்து வீசுவேன், எனக்கு நீண்ட நியாபக சக்தியும் உண்டு" என்று மிரட்டல் பாணியில் தெரிவித்தார். இதைக் கண்டு சற்றும் தளராத ஹர்சித் ரானா தனது அடுத்த ஒவரில் மீண்டும் ஸ்டார்க்கிற்கு பந்துவீசினார்.
மிக அற்புதமாக வந்த ஹர்சித் ரானாவின் பவுன்சர் பந்து ஸ்டார்க்கின் ஹெல்மட்டை பதம் பர்த்தது. உடனே, ஸ்டார்க் நலமாக இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பிய ஹர்சித் ரானா, தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டலுக்கு தரமான பதிலடி கொடுத்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் மட்டும் 26 ரன்கள் குவித்து ஹர்சித் ரானாவின் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையும் படிங்க:முன்னாள் ஜாம்பவானை பின்னுக்குத் தள்ளிய பும்ரா! சாதனையில் இது புது சாதனை!