பார்படாஸ்:2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக சாம்பியன்(world championship) பட்டத்தைத் தன்வசப்படுத்தியது இந்தியா அணி.
ஐசிசி(ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி ஆகியவற்றில் இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி இரண்டிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனால், ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு நுழைந்த பின்னர், எப்படியாவது கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர் இந்திய வீரர்கள், நேற்று(சனிக்கிழமை) இரவு பார்படாஸின் பிரிட்ஜ்டெளன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி டாஸை வென்றதுமே ரசிகர்களுக்கு மாபெரும் நம்பிக்கை பிறந்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டர்ன் ரோஹித் மற்றும் விராத் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனாலும், வெறும் 9 ரன்களில் மகராஜ் வீசிய பந்தில் அவுட்டாகி ரோகித் சர்மா பெவிலியன் திரும்பியதும் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.பின்னா் வந்த ரிஷப் பந்த்தும் மகராஜ் வீசிய ஓவரிலேயே அவுட்டாகினார். அதனைத் தொடர்ந்து சூரியகுமாா் யாதவும் வெறும் 3 ரன்களுடன் ரபாடா வீசிய ஓவரில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினாா். இதனால் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றத்திலிருந்தது.
இதனால் பொறுப்புடன் விளையாடிய விராத் கோலி - அக்சர் பட்டேல் ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். நான்கு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 31 பந்துகளில் 47 ரன்களை விளாசிய அக்சர் பட்டேல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர், கிங் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஷிவம் துபோ அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.