ஐதராபாத்:உலக பிக்கில் பால் அமைப்பு மற்றும் ஆல் இந்தியா பிக்கில் பால் அசோசியேஷன் நடத்தும் பிக்கில் பால் விளையாட்டு தொடரில் சென்னை அணியின் உரிமையாளராக நடிகை சமந்தா உள்ளார். உலகளவில் தற்போது பிக்கில் பால் விளையாட்டு மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் பிக்பால் பால் விளையாட்டு அதிகம் பேரால் விளையாடக் கூடிய விளையாட்டாக மாறி வருகிறது.
டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், டென்னிஸ் ஆகிய மூன்று விளையாட்டுகளையும் ஒருங்கிணைந்த வகையில் இந்த பிக்கில் பால் கேம் விளையாடப்படுகிறது. டென்னிஸ் கோர்ட்டில், டேபிள் டென்னிஸ் பேட் வைத்து விளையாடும் இந்த பிக்கில் பால் விளையாட்டுக்கு என தனி விதிமுறைகள் உள்ளன.
இந்நிலையில், விரைவில் நடைபெற உள்ள உலக பிக்கில் பால் விளையாட்டு தொடரில் சென்னை அணி கலந்து கொள்கிறது. சென்னை அணியின் உரிமையாளரான சமந்தா, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார். இதனிடையே, பிக்கில் பால் விளையாட்டை ஊக்குவிக்கவும், பிரபலப்படுத்தும் வகையில் நடிகை சமந்தா தன் நண்பர்களுடன் இணைந்து பிக்கில் பால் விளையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
பிங்க் நிற உடையில் மெல்லிய தேகத்துடன் காணப்படும் சமந்தா, நண்பர்களுடன் பிக்கில் பால் விளையாடுகிறார். உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததா இந்த பிக்கில் பால் விளையாட்டு என்றால், அதனால் இதயம் உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளை தடுக்க முடியும் என்கின்றனர் உடற்கல்வியாளர்கள்.
பிக்கில் பால் விளையாட்டின் மூலம் என்னென்ன உடல் ஆரோக்கியத்தை பெறலாம் என்று இந்த செய்தியில் காணலாம்.
கை விரல்களுக்கு நல்ல உடற்பயிற்சி:பிக்கில் பால் விளையாடுவதன் மூலம் நம்மை துருதுருவென வைத்துக் கொள்ள உதவுகிறது. அடுத்தடுத்து பந்துகளை கவனித்து உடனடியாக விளையாட வேண்டும் என்பதால் நமது உடலின் சமநிலை மற்றும் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்துகிறது. இது தவிர துல்லியமான கண் பார்வை, கைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், புத்திக் கூர்மையையும் உருவாக்க உதவுகிறது. மேலும், உடல் எடை குறைவது மட்டுமின்றி பாதங்கள், கால் எலும்புகள் ஆரோக்கியமடைகின்றன.