ஐதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு சரியாக இன்னும் 4 மாதங்கள் உள்ளன. அண்மையில் 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கோலாகலமாக நடைபெற்றது. ஏலத்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த வீரர்களில் ஒருவர் குர்ஜப்நீத் சிங், 30 லட்ச ரூபாய் அடிப்படைத் தொகையில் களமிறங்கிய இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
இதன் காரணமாகவே குர்ஜப்நீத் சிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் குர்ஜப்நீத் சிங் ஓவரில் ஹர்திக் பாண்ட்யா சிக்சர், பவுண்டரி என விளசிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சையது முஷ்டாக் அலி தொடரில் நேற்று (நவ.27) நடந்த குருப் பி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. தமிழக அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் 57 ரன்களும், விஜய் சங்கர் அவுட்டாகாமல் 42 ரன்களும் குவித்தனர். தொடர்ந்து விளையாடிய பரோடா அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பனு பனியா (42 ரன்) மட்டும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விளையாடி அணியின் மானத்தை காப்பற்றினார். இந்நிலையில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா தமிழ்நாடு அணியின் கைகளில் இருந்த வெற்றிக் கனியை பறித்துச் சென்றார். ஆட்டத்தின் 17வது ஓவரை குர்ஜப்நீத் சிங் வீசிய நிலையில் அந்த ஓவரில் மட்டும் ஹர்திக் பாண்ட்யா நான்கு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார்.
இதில் ஹாட்ரிக் சிக்சரும் அடங்கும், தோல்வியின் விளிம்பில் இருந்த பரோடா அணியை தனது அபார ஆட்டத் திறன் மூலம் ஹர்திக் பாண்ட்யா வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதி ஓவரின் இரண்டாவது பந்தில் ஹர்திக் பாண்ட்யா (69 ரன்) ரன் அவுட்டானர். பரோடா அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி பந்தில் ராஜ் லிம்பானி பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
பரோடா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்து த்ரில் வெற்றி பெற்றது. குர்ஜப்நீத் சிங் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரின் அடுத்தடுத்த ஓவர்கள் போட்டியில் திருப்புமுனையாக மாறி தமிழ்நாடு அணியின் கைவசம் இருந்த வெற்றி காணாமல் போனது. நாளை (நவ.29) நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி - குஜராத்தை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க:சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இழக்கும் பாகிஸ்தான்! ஆனால் இந்தியா காரணம் இல்ல!