சென்னை: சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதே பகுதியை சேர்ந்த தண்ணீர் கேன் போடும் சதீஷ் என்ற இளைஞர் மற்றும் 14 வயது சிறுவன் மீது புகாரளித்துள்ளார்.
அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்த நிலையில் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து. இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரிக்க உச்ச நீதிமன்ற உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கில் 14 வயது சிறுவன் மற்றும் சதீஷ் என்ற இளைஞர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி அதிமுக 103-வது வட்ட செயலாளர் சுதாகர், அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: அண்ணா நகர் சிறுமி வழக்கு: அதிமுக நிர்வாகி உட்பட இருவர் கைது!
இந்நிலையில், இன்று அதிமுக தலைமை சார்பில் அதிமுக 103-வது வட்ட செயலாளர் சுதாகர் சட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக வெளியிடப்பட்ட அறிக்கையில், “கழகத்தின் கொள்கை, குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம், அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த ப. சுதாகர், (103 வடக்கு வட்டக் கழகச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது” என அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.