ஐதராபாத்:2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணங்களால் பாகிஸ்தானில் சென்று விளையாடுவதை இந்தியா தவிர்த்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தன் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தனது சமூகவலைதள பக்கத்தில், 2006ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது விளையாடிய ஒரு ஆட்டத்தில், ஹர்பஜன் சிங்கின் ஓவரில் ஷாகித் அப்ரிடி தொடர்ச்சியாக நான்கு சிக்சர்கள் அடித்ததை மேற்கொள்காடி இதற்காகத் தான் இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்றும் அதனாலே இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வர மறுப்பதாகவும் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகருக்கு பதிலளிக்கும் வகையில், 2009ஆம் ஆண்டு இலங்கை வீரர்கள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்த நாளேடின் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த காரணத்திற்காக தான் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு வருவதில்லை என ஹர்பஜன் சிங் பதிவிட்டு உள்ளார்.
ஹர்பஜன் சிங்கின் இந்த தரமான பதிலடியை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் ரசிகர் வாயடைத்தார் போல் சென்றார். பாகிஸ்தான் ரசிகருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹர்பஜன் சிங் வெளியிட்ட பதிவுக்கு இந்திய ரசிகர்கள் தொடர்ந்து வரவேற்பு அளித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுகிறது.