ஜிந்த்: பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அரசியலில் குதிக்கப் போவதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில் நடைபெற்ற விழாவில் வினேஷ் போகத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அரசியலில் சேரச் சொல்லி தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், ஆனால் அனுபவம் வாய்ந்தவர்களிடம் கலந்து பேசி ஆலோசனை பெற்ற பின்னரே முடிவு எடுப்பேன் என்றும் வினேஷ் போகத் தெரிவித்தார்.
அப்போது அரசியல் அல்லது விளையாட்டு இரண்டில் எது உங்களது தேர்வாக இருக்கும் எனறு எழுப்பப்பட்ட கேள்விக்கு, இரண்டையும் ஒரே நேரத்தில் தொடர்வேன் என்றும் வினேஷ் போகத் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தான் ஜிந்த் நகரத்தின் மருமகள் என்றும் அரியானாவின் அரண் ஜிந்த் நகரம் என்றும் கூறினார்.
மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக காணப்படுகிறது என்றும், \ விவசாயிகளின் அவலநிலை மற்றும் அரசின் அறியாமையை நினைத்து தான் வருத்தம் கொண்டதாகவும் தெரிவித்தார். இருப்பினும், விவசாயிகள் தங்களது போராட்டத்தில் உறுதியாக இருந்து வெற்றி பெற்றதாகவும், தான் கஷ்டத்தில் இருந்த போதெல்லாம் விவசாயிகள் தனக்கு ஆதரவாக இருந்தனர் என்றும் வினேஷ் போகத் கூறினார்.