டெல்லி :முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீர், கிரிக்கெட்டில் தொடர்ந்து கவனம் செலுத்த விரும்புவதாகவும், அதன் காரணமாக அரசியல் பணிகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவிற்கு எழுதி உள்ளார்.
டெல்லி கிழக்கு தொகுதி மக்களவை உறுப்பினரான கவுதம் கம்பீர், இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், எதிர்வரும் கிரிக்கெட் பொறுப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்த விரும்புவதால் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அரசியல் பணிகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்காக பணியாற்ற வாய்ப்பு வழங்கிய பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நன்றி, ஜெய்ஹிந்த் என்றும் பதிவிட்டு உள்ளார்.
அதேநேரம், அவர் தீவிர அரசியலில் இருந்து விலக உள்ளாரா அல்லது என்ன காரணத்திற்காக இந்த முடிவு எடுத்து உள்ளார் என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த கவுதம் கம்பீர் மக்களவை தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டார்.
அங்கு ஆம் ஆத்மி வேட்பாளர் அதிசியை வீழ்த்தி மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். விரைவில் மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கவுதம் கம்பீரின் இந்த அறிவிப்பு அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார் என்பதை உணர்த்துவதாக தெரிகிறது.
கடந்த 2007 மற்றும் 2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி டி20 மற்றும் 50 ஓவர் உலக கோப்பையை வெல்ல அணியில் முக்கியப் பங்காற்றியவர் கவுதம் கம்பீர். இந்திய அணிக்காக 58 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 4 ஆயிரத்து 154 ரன்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 147 ஆட்டங்களில் 5 ஆயிரத்து 238 ரன்களும் கம்பீர் குவித்து உள்ளார்.
தற்போது கவுதம் கம்பீர் ஐபிஎல் கிரிக்கெட்டில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். மேலும் கவுதம் கம்பீர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :ஸ்பெயின் பெண் கூட்டுபாலியல் வன்கொடுமை! சுற்றுலா வந்தவருக்கு நேர்ந்த கொடூரம்!