ஐதராபாத்: கிரிக்கெட்டில் ஹேர்ஸ்டைலுக்காக புகழ் பெற்ற வெகு சிலரில் மகேந்திர சிங் தோனியின் ஒருவர். தற்போது புது லுக்கில் இருக்கும் எம்.எஸ் தோனியின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தோனியின் பிரத்யேக ஸ்டைலிஸ்ட்டான ஆலிம் ஹக்கிம், தான் புதிய ஹேர்ஸ்டைலுக்கு வடிவம் கொடுத்து இருக்கிறார்.
இந்திய அணியில் தோனி கடைசியாக 2019ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் உலக கோப்பை அரைஇறுதி ஆட்டத்தில் விளையாடினார். அந்த உலக கோப்பை தொடரில் அரைஇறுதியில் இந்திய அணி தோல்வியை தழுவி வெளியேறியது. அதன்பின் நீண்ட நாட்கள் அணியில் இடம் பெறாத எம்.எஸ் தோனி, 2020ஆம் ஆண்டு தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த சீசனில் தோனி எப்படியும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதை அடுத்து ருதுராஜ் கெய்க்வாட் அணியை வழிநடத்தினார்.
அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா என உறுதியாக சொல்ல முடியாது என்பதால். இந்த சீசனில் கோப்பையை வென்று அதை தோனிக்கு சமர்ப்பிக்க சென்னை அணி வீரர்கள் நிச்சயம் முயற்சிப்பார்கள். அதேநேரம் தோனியை சென்னை அணியில் தக்கவைக்கவே பிசிசிஐயிடம் ஆர்டிஎம் விதிமுறையை மீண்டும் அமல்படுத்த சென்னை அணி நிர்வாகம் கோரியதாக தகவல் கூறப்படுகிறது.
அவரை ஆர்டிஎம் விதியின் மூலம் தக்கவைக்க சென்னை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தோனியின் வருவாய் சுமார் 8 கோடி ரூபாய் வரை வீழ்ச்சி அடையும் என சொல்லப்படுகிறது. 4 கோடி ரூபாய் ஊதியத்திற்கு எம்.எஸ் தோனி சென்னை அணியில் நீடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எவ்வாறாயினும் அடுத்த ஐபிஎல் சீசனுக்கு தயார் என்பதை தனது புது ஹேர்ஸ்டைல் லுக் மூலம் தோனி வெளிப்படுத்தி உள்ளார். கடந்த சீசனில் சாதாரண லுக்கில் தோன்றிய எம்.எஸ் தோனி, தற்போது உத்வேகம் அளிக்கும் வகையில் புது ஹேர்ஸ்டைலுக்கு மாறி உள்ளார். தோனியின் புது ஹேர்ஸ்டைல் லுக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இதையும் படிங்க:முகமது ஷமி இல்லாததற்கு இதுதான் காரணமா? பிசிசிஐ போடும் திட்டம் உண்மை தானா?