ஐதராபாத்: 1975ஆம் ஆண்டு முதல் 1987 வரை இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடியவர் அன்ஷுமன் கெய்க்வாட். ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 71. ஏறத்தாழ 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அவர் விளையாடி உள்ளார்.
மேலும், இந்திய தேசிய அணியிம் தலைமை பயிற்சியாளராகவும், தேர்வு குழு உறுப்பினராகவும் அன்ஷுமன் கெய்க்வாட் பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளார். 1982-83 பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 201 ரன்கள் குவித்து சாதனை படைத்து உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 70 இன்னிங்ஸ்களில் விளையாடி ஆயிரத்து 985 ரன்கள் குவித்துள்ளார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் இரட்டை சதம் அடித்துள்ள அன்ஷுமன் கெய்க்வாட் ஏறத்தாழ 671 நிமிடங்கள் களத்தில் நின்று அதிக நேரம் மைதானத்தில் பேட்டிங் செய்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
80 காலக்கட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் மைக்கேல் ஹோல்டிங் பந்துவீச்சுக்கு மிரளாத பேட்ஸ்மேன்களே கிடையாது. அப்போதே அவரது பந்துவீச்சு அடித்து ஆடி 81 ரன்கள் குவித்து கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த பெருமையும் அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கும் உண்டு எனச் சொல்ப்படுகிறது.
நிகழ்கால கிரிக்கெட்டில் உள்ள ஹெல்மட், பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட உபகரணங்கள் அந்தகால கிரிக்கெட்டில் பெருமளவு இல்லாத போது, மைக்கோல் ஹோல்டிங் வீசிய பவுன்சர் பந்து அன்ஷுமன் காதில் பட்டு, அதற்கு அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டதும் உண்டு எனக் கூறப்படுகிறது.
1997 மற்றும் 2000 ஆண்டுகளில் இந்திய அணிக்கு பயிற்சியாளராகவும் அன்ஷுமன் கெய்க்வாட் இருந்துள்ளார். இவரது பயிற்சியின் கீழ் உருவான வீரர்களில் சச்சின் தெண்டுல்கரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் வென்றது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் அனில் கும்பிளே 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை சமன் செய்தது என பல்வேறு சாதனைகளை குறிப்பிட்டு கூறலாம். 1980 காலக் கட்டங்களில் போதிய பயிற்சி மற்றும் ஆட்டத்திறன் கொண்டிருக்காத இந்திய அணியை இன்று உலகின் சிறந்த அணியாக கொண்டு வந்தவர்களில் அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கும் தனிப் பெருமை உண்டு.
ரத்தப் புற்றுநோய் காரணமாக நீண்ட நாட்கள் அவதிப்பட்டு வந்த அவர் லண்டனில் சிகிச்சை பெற்று கடந்த மாதம் நாடு திரும்பினார். பரோடாவில் வசித்து வந்த நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்/ ஐசியுவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சிகிச்சைக்காக பிசிசிஐ ஒரு கோடி ரூபாய் வழங்கியது.
அன்ஷுமன் கெய்க்வாட் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அன்ஷுமான் கெய்க்வாட் கிரிக்கெட்டுக்கான அவரது பங்களிப்பிற்காக நினைவுகூரப்படுவார். அவர் ஒரு திறமையான வீரர் மற்றும் ஒரு சிறந்த பயிற்சியாளர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:பாரிஸ் ஒலிம்பிக்: பாய்மர படகு போட்டி களமிறங்கும் தமிழக வீரர்கள்! - paris olympics 2024