ஐதராபாத்:குஜராத் மாநிலத்தின் உள்ள ஜாம்நகர் பேரரசின் அடுத்த மன்னராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜெய் ஜடேஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக நவாநகர் மகாராஜா ஜாம் சாஹேப் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ஜாம்நகர் அரசர் சத்ருசல்யாசின்ஜி திக்விஜய்சின்ஹ்ஜி ஜடேஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், அஜெய் ஜடேஜா தனது வாரிசாக இருக்க ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சத்ருசல்யாசின்ஜி திக்விஜய்சின்ஹ்ஜி ஜடேஜாவின் சகோதரரின் மகன் தான் கிரிக்கெட் வீரர் அஜெய் ஜடேஜா. கிரிக்கெட் வீரர் அஜெய் ஜடேஜா அரச குடும்பத்தில் பிறந்தவர். அவரது உறவினர்களான கே. ரஞ்சித்சிங்ஜி, மற்றும் கே.எஸ் துலிப்சிங்ஜி ஆகியோரின் நினைவாகத் தான் ரஞ்சிக் கோப்பை மற்றும் துலிப் கோப்பை கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படுகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் போலந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தலைநகர் வார்ஷாவில் உள்ள ஜாம் சாஹேப் நவாநகர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், தற்போது இந்த ஜாம் சாஹேப் நவாநகரின் அடுத்த வாரிசாக அஜெய் ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.