கயானா (வெஸ்ட் இண்டீஸ்):ஐசிசி டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம், வென்ஸ் இண்டீசின் கயானாவில் இன்று நடைபெற்றது. அங்குள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 8 மணிக்கு ஆட்டம் ஆரம்பித்திருக்க வேண்டும்.
ஆனால் போட்டி நடைபெறும் மைதானத்தில் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வந்ததால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இப்போட்டி நடைபெறுமா என்று கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர்.
அவர்களின் காத்திருப்பு வீண் போகாதவாறு, இந்திய நேரப்படி இரவு 8:45 மணிக்கு டாஸ் போடப்பட்டு போட்டி துவங்கியது. அதாவது இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தமது அணி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.