திருநெல்வேலி: கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உல்லால் போலீஸ் எல்லைக்குட்பட்ட கே.சி. ரோடு பகுதியில் விவசாய கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 17ந் தேதி காலை 11.30 மணி அளவில் முகமூடி அணிந்திருந்த கும்பல் கைத்துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் நுழைந்துள்ளது. அந்த கும்பல் அங்கிருந்த வங்கி ஊழியர்களை மிரட்டி சுமார் ரூ. 4 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரொக்கப் பணத்தை அள்ளி சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உல்லால் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 6-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தேடுதல் வேட்டையை நடத்தியது.
மூவர் கைது
இந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்மநேரி கிராமத்தைச் சேர்ந்த முருகாண்டி (36), ஜோசுவா ஆகிய 2 பேரை மங்களூரு தனிப்படையின் 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களை அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மங்களூருக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ தங்கம், ரூ.3 லட்சம் ரொக்கம், மும்பை பதிவெண் கொண்ட கார், இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 3 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: மங்களூரு வங்கி கொள்ளை: நெல்லையைச் சேர்ந்த மூவர் கைது; ஒன்றரை கோடி மதிப்பிலான 2 கிலோ நகை, பணம் பறிமுதல்!
இந்நிலையில், இதில் தொடர்புடைய கண்ணன் மணி என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரும் நெல்லை மாவட்டத்தை சார்ந்தவர் ஆவார். இவர்கள் 3 பேரும் கர்நாடகா சிறப்பு போலீஸ் படையினரிடம் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மேலும் கூடுதல் நகைகளை நெல்லையில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
15 கிலோ நகைகள்
எனவே இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று நெல்லை வந்தனர். அவர்கள் முருகாண்டியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 15 கிலோ தங்க நகைகளை கைப்பற்றி உள்ளனர். இதுதொடர்பாக முருகாண்டியின் 65 வயதான தந்தை சண்முக சுந்தரத்திடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் கைதாகியுள்ள நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேருமே மும்பையில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். தனிப்படை போலீசார் முதலில் மும்பையில் கண்ணன் மணியை கைது செய்துள்ளனர். அவர் அளித்த தகவலின்படி நெல்லையில் பதுங்கியிருந்த முருகாண்டி மற்றும் ஜோசுவா இருவரையும் கைது செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் போன்ற பிற மாநிலத்தை சேர்ந்த பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில், இன்று நெல்லை முருகாண்டி வீட்டில் 15 கிலோ நகைகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.