ஹைதராபாத்:இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும் 2-1 என்ற கணக்கில் இத்தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவில சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் மூன்றாவது போட்டி, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கட் 51 ரன்களும், லிவிங்ஸ்டோன் 43 ரன்களும் குவித்தனர். கேப்டன் ஜோல் பட்லர் தன் பங்கிற்கு 24 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
172 ரன்கள் வெற்றி இலக்குடன் அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஃப்ரா ஆர்சரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வந்த வேகத்தில் பெளவிலியன் திரும்பினார். மற்றொரு துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், அவரும் 24 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 14 ரன்களுக்கும், திலக் வர்மா 18 ரன்களுக்கும் என சீரான இடைவெளியில் இந்திய அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டே இருந்தது.
ஹர்திக் பாண்டியா மட்டும் அதிரடியாக நின்று ஆடி 40 ரன்களை சேர்த்தார். ஆனால், அவருக்கு இணையாக மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும்படி ரன்களை சேர்க்காததால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து. 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜெமி ஓவர்டோன் 3 விக்கெட்டுகளும், ஆர்ச்சர், பிரைடன் கர்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கங்களது அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால், 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்திருக்கும் என்பதுடன், இத்தொடரையும் கைப்பற்றியிருக்கும். மாறாக தோல்வியடைந்ததால், 2-1 என்ற நிலையில் மட்டும் இந்தியா தற்போது முன்னிலை வகிக்கிறது. இத்தொடரின் நான்காவது போட்டி புனேவில் வரும் 31 ஆம் தேதி நடைபெற உள்ளது.