ஐதராபாத்:ஹாங்காங் சூப்பர் சிக்ஸ் விளையாட்டு தொடரில் இந்திய வீரர் ராபின் உத்தப்பா வீசிய ஓவரில் இங்கிலாந்து முன்னாள் வீரர் ரவி போபரா 37 ரன்கள் விளாசினார். மங் காக் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. ஆட்டத்தின் 4வது ஓவரை ராபின் உத்தப்பா வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர் ரவி போபரா, அடித்து ஆடினார்.
அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்ட ரவி போபரா மைதானத்தில் நாலாபுறம் பந்துகளை பறக்க விட்டு வாண வேடிக்கை காட்டினார். உத்தப்பாவின் ஓவரில் அடுத்தடுத்து 5 பந்துகளை சிக்சராக ரவி போபரா விளாசினார். கடைசி பந்து ஒய்டு ஆன நிலையில், அதற்கு மாற்றாக வீசப்பட்ட பந்திலும் ரவி போபாரா சிக்சர் பறக்கவிட்டு களங்கடித்தார்.
இதன் மூலம் அந்த ஓவரில் மட்டும் ரவி போபரா 37 ரன்கள் குவித்தார். தொடர்ந்து நிறுத்தாத ரவி போபரா அடுத்த வந்த ஷபாஸ் நதீமின் ஓவரின் முதல் பந்திலும் சிக்சர் விளாசினார். அடுத்தடுத்து 7 சிக்சர்களை பறக்கவிட்டு ரவி போபரா சாதனை படைத்தார். 14 பந்துகளில் ரவி போபரா அரை சதம் கடந்தார். 53 ரன்கள் எடுத்த நிலையில் ரவி போபரா ரிட்டயர்ட் ஹார்ட் கொடுத்து வெளியேறினார்.
அந்த ஆட்டத்தில் மட்டும் ரவி போபரா மொத்தம் 8 சிக்சர்களை பறக்கவிட்டு குழுமியிருந்த ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார். அவருக்கு உறுதுணையாக சமித் பட்டேல் 18 பந்துகளில் 4 பவுணடரி 5 சிக்சருடன் 51 ரன்கள் குவித்து உதவினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் குவித்தது.
பந்துவீச்சிலும் அசத்திய ரவி போபரா ராபின் உத்தப்பா உள்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக விளையாடினார். இறுதிக் கட்டத்தில் அணியின் வெற்றிக்காக கேதர் ஜாதவ் (48 ரன்) மட்டும் போராடிக் கொண்டு இருந்தார். 6 ஓவர்களில் இந்திய அணியால் 3 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் தோல்வியை கண்ட இந்திய அணி ஹாங்காங் சூப்பர் சிக்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவிய இந்திய அணி, தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராகவும் தோல்வி கண்டது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்திலும் தோல்வி அடைந்த நிலையில் ஹாங்காங் சூப்பர் சிக்ஸ் தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.
இதையும் படிங்க:11 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சம்பவம் செய்த ரோகித் சர்மா! அந்த ரோகித் சர்மாவா இது?