சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் காரைக்காலுக்கு இன்று-செவ்வாய்க்கிழமை (நவ.26) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்டும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 26, 2024
விடுமுறை அளித்துள்ள மாவட்டங்கள்:
நாகப்பட்டினம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார். ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக மயிலாடுதுறையில், இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை: மயிலாடுதுறை கலெக்டர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
அதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். அதேபோல, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை (ஆரஞ்சு அலர்ட் ) இந்திய வானிலை ஆய்வு அறிவித்துள்ளது. கனமழை காரணமாக தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். மேலும், வடகிழக்கு பருவமழை 2024 தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
புகார் மற்றும் உதவி எண்கள் அறிவிப்பு: மேலும், பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான பாதிப்புகள், கோரிக்கைகளை கட்டணமில்லா தொலைபேசி எண்-1077, தொலைபேசி எண் 04362-230121 மற்றும் வாட்ஸ்ஆப் எண் - 93450 88997 ஆகிய எண்களை பயன்படுத்தி தெரிவிக்கலாம் எனவும் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறுவுறுத்தியுள்ளார். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளில் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்