ஐதராபாத் : 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடப் போவதில்லை என இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்து உள்ளார். பந்துவீச்சு உடற்தகுதியை மேம்படுத்துவதற்காகவும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஆல் ரவுண்டராக செயல்படவும் முன்னுரிமை அளிக்கும் வகையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணியாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அதிரடியாக அரைசதம் விளாசிய பென் ஸ்டோக்ஸ் அணி உலகக் கோப்பையை வெல்லவும் உறுதுணையாக இருந்தார்.
இருப்பினும், கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்த காயங்கள் காரணமாக பென் ஸ்டோக்ஸ் தொடர் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பென் ஸ்டோக்ஸ், பின்னர அந்த முடிவில் இருந்து பின்வாங்கி கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மீண்டும் விளையாடினார்.
அதேபோல் அண்மையில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பென் ஸ்டோக்ஸ் பந்துவீசுவதை தொடர்ந்து தவித்து வருகிறார். அண்மையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கூட பென் ஸ்டோக்ஸ் ஒட்டுமொத்தமாக 5 ஓவரகள் மட்டுமே பந்துவீசினார். மேலும், அந்த தொடரில் இங்கிலாந்து அணி 4-க்கு 1 என்ற கணக்கில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் அண்மையில் பேட்டி அளித்த பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் முழு உடல்தகுதியை எட்டவும், எதிர்வரும் போடிகளில் சிறந்த ஆல் ரவுண்டராக முழுமை பெற விரும்புவதாக தெரிவித்தார். இந்நிலையில், தான் 2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடப் போவதில்லை என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்து உள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் விலகியதால், அவருக்கு பதிலாக அணியின் 4வது இடத்தில் லியம் லிவிங்ஸ்டோமை களமிறக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு உள்ளது. அதேபோல் ஆல் ரவுண்டர் இடத்தை நிரப்ப மேஜி ஓவர்டென் அல்லது சர்ரே ஆகியோரை தேர்வு செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 20 ஓவர் உலக கோப்பை இங்கிலாந்து அணியை ஜோஸ் பட்லர் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க :மக்களவை தேர்தல்: காங்கிரஸ் 11வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு! கடப்பாவில் ஒய்எஸ் ஷர்மிளா போட்டி! - Lok Sabha Election 2024