ஜெய்பூர்:நடப்பு ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி - ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டெல்லி அணியின் ஓப்பணிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய டேவிட் வார்னர் 34 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உள்பட 49 ரன்கள் எடுத்து இருந்தநிலையில் அவுட் ஆனார். இந்த போட்டியில் 5 பவுண்டரிகள் விளாசியதன் மூலம் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார் வார்னர்.
அதாவது ஐபிஎல் தொடரில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்களின் (650 பவுண்டரிகள்) பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஷிகர் தவான் உள்ளார். அதே போல் டெல்லி அணிக்காக அதிக ரன்கள்( 2433 ரன்கள்) குவித்தவர்கள் பட்டியலிலும் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் இடதுகை பேட்மேன் டேவிட் வார்னர் 2009 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்று தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றார். அதன் பிறகு 2014 வரை அந்த அணிக்காக விளையாடினார்.
இதனைதொடர்ந்து சில ஆண்டுகள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினர். அதன் பிறகு 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2022ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை மீண்டும் ஏலத்தில் எடுத்தது. இதுவரை 178 போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் பல நேரங்களில் தன்னுடைய முழுமையான பங்களிப்பை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல முக்கிய பங்காற்றியுள்ளார். அவரின் இந்த புதிய சாதனை வரவிருக்கும் போட்டிகளில் அவரை உற்சாகத்துடன் பங்கேற்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க:DC Vs RR: ரியல் ஹீரோவான ரியான் பராக்! டெல்லியை துவம்சம் செய்த ராஜஸ்தான்!