மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபில் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 69 ரன்களும், ஷிவம் துபே 66 ரன்களும், கடைசி ஓவரில் களமிறங்கிய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர் உட்பட 20 ரன்களும் குவித்து அசத்தினர்.
பின்னர், சொந்த மண்ணில் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி சார்பில் முன்னாள் கேப்டனுமான ரோஹித் சர்மா 63 பந்துகளுக்கு 105 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் யாரும் பெரிதாக விளையாடமால் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியதால் மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்து சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது.
சம பலம் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியதால் நேற்றைய போட்டி 'எல் கிளாசிகோ' போட்டியாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஐபிஎல் தொடர்களில் இதுவரை தலா ஐந்து முறை கோப்பை வென்ற அணிகள் என்பதால் இந்த அணிகள் மோதும் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். அவர்களுக்கு விருந்து படைத்த போட்டியாக நேற்றையை போட்டி இருந்தது.