ஐதராபாத்:சவுதி அரேபியாவில் நடந்து வரும் கிங்ஸ் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் போர்ச்சுகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நசர் அணியும், அல் தாவூன் ( Al-Taawoun) அணியும் மோதிக் கொண்டன. ஆட்ட நேர முடிவில் தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்ற ரொனால்டோ முயன்றார்.
கோல் கீப்பரை நோக்கி ரொனால்டோ வேகமாக திருப்பிய பந்து, எதிர்பாராத விதமாக சற்றும் மேலே உயர்ந்து பார்வையாளர்கள் மாடத்திற்குள் புகுந்தது. அங்கு ரொனால்டோவின் பெனால்டி சூட் அவுட்டை படம் பிடிக்க ஆர்வமாக தனது செல்போனை பிடித்துக் கொண்டு இருந்த குட்டி ரசிகரின் மீது பந்து பலமாக மோதியது.
இதில் ரசிகரின் போன் உயர பறந்து தரையில் விழுந்து சேதமானது. ரொனால்டோ அடித்த பந்து ரசிகரை தாக்கிய நிகழ்வு வீடியோவாக பதிவானது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதேநேரம் கிங்ஸ் கோப்பை தொடரில் இருந்து ரொனால்டோவின் அல் நசர் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
அல் தாவூன் அணி 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், பெனால்டி வாய்ப்பில் ரொனல்டோ நிச்சயம் கோல் அடித்து 1-க்கு 1 என்ற சமனில் கொண்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இருப்பினும், ரொனால்டோ அடித்த பந்து மைதானத்தை விட்டு வெளியேறியது மட்டுமின்றி அந்த அணியின் வெற்றிக் கனவையும் பறித்தது.
அல் தாவூன் அணியின் வலீத் அல் அஹமத் ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் அசத்தலாக கோல் திருப்பி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த தோல்வியின் மூலம் 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நசர் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. சவுதி அரேபியாவின் அல் நசர் அணியில் ஒப்பந்தம் ஆனது முதல் ரொனால்டோ இதுவரை அந்த அணிக்காக ஒரு கோப்பை கூட வென்று தந்தது இல்லை.
அந்த சோகத்தை கிங்ஸ் கோப்பை கால்பந்து தொடரின் மூலம் ரொனால்டோ தீர்ப்பார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
இதையும் படிங்க:"என் வீட்டுக்கார் விளையாட வர மாட்டார்"- அடித்து சொன்ன வார்னர் மனைவி!