சென்னை:கிரிக்கெட் ரசிகர்களால் 'ஹிட் மேன்' என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா, இன்று தனது 37வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி கிரிக்கெட், சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
1989ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள பன்சோடில் பிறந்த ரோகித் சர்மாவிற்கு, தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் பள்ளிக் கட்டணம் கூட செலுத்த முடியாத நிலையில் இருந்தார் என்றார், உங்களால் நம்ப முடிகிறதா?
ரோகித் சர்மாவின் தந்தையான குருநாத் சர்மா, சரக்கு போக்குவரத்து நிறுவனத்தில் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தார். இதனால் ரோகித் சர்மாவுடன் பிறந்த மற்றொரு சகோதரர் விஷால் சர்மா ஆகிய இருவரையும் பார்த்துக் கொண்டு குடும்பத்தையும் நடத்த முடியவில்லை.
இதனால் ரோகித் சர்மாவை அவரது சித்தப்பா வீட்டிற்கு அனுப்பி வைத்தார், அவரது தந்தை. ஆரம்பம் முதலே கிரிகெட் ஆர்வம் இருந்த ரோகித் சர்மாவிற்கு போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், அவரது வாழ்வில் திரும்பு முனையாக இருந்தவர்தான் சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட்.
பயிற்சியாளரின் நம்பிக்கை, ரோகித் சர்மாவின் தீவிர பயிற்சி அவரை இந்திய அணியில் இடம் பெறச் செய்தது. 2007ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தனது சர்வதேசப் பயனத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் முதலில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் விளையாடிய ரோகித் சர்மா, 2009ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கோப்பையை வென்றார்.
அதன்பிறகு 2011இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர், 2013-இல் கேப்டன் பொறுப்பை ஏற்று 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 என 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கோப்பை வென்று கொடுத்துள்ளார்.
தன்னுடைய கிரிக்கெட் வாழ்கையில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளையும், விமர்சனங்களையும் சந்தித்த ரோகித் ஒரு போதும் துவண்டுவிடாமல் தொடர்ந்து உழைத்தார். அதன் விளைவுதான் 2022ஆம் ஆண்டு ஒரு நாள், டி20, மற்றும் டெஸ்ட் ஆகிய 3 போட்டிகளுக்கு இந்திய அணியை வழிநடத்தக்கூடிய வாய்ப்பை பெற்றார்.
இதுவரை 59 டெஸ்ட் போட்டிகள், 236 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 151 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள ரோகித் சர்மா, பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார் என்றால் அது மிகையாகாது.
இதையும் படிங்க:"ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்" - நேத்ரா குமணன் நம்பிக்கை!