பார்படோஸ்: இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி, வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் கேன்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூன் 29) நடைபெற்றது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றியது.
விராட் கோலி - அக்ஷர் படேல் பார்ட்னர்ஷிப்:இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கான காரணங்களை பொறுத்தமட்டில், முதலாவது முக்கிய காரணம் விராட் கோலி - அக்ஷர் படேல் பார்ட்னர்ஷிப் தான். டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி துவக்கத்திலேயே தடுமாற்றத்தை சந்தித்தது. கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களிலும், ரிஷப் பந்த் டக் அவுட் மற்றும் சூர்யகுமார் யாதவ் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட் ஆகினர். அப்போது இந்திய அணி 4.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்துக்கொண்டு இருந்தது. ஒருபுறம் இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்துக்கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக 5வது ஆட்டக்காரராக ஆல் ரவுண்டர் அக்ஷர் படேல் களமிறங்கினார்.
மற்றொரு துவக்கவீரர் விராட் கோலியுடன் கைக்கோர்த்த அக்ஷர் படேல் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்க பெரிதும் உதவினார். அக்ஷர் படேல் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துரதிஷ்டவசமாக விக்கெட் கீப்பர் டி காக்கால் ரன் அவுட் செய்யப்பட்டார். பின்னர் நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி 59 பந்துகளில் 2 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 76 ரன்கள் விளாசினார். கடைசியில் வந்த துபேவும் (27 ரன்கள்) கைக்கொடுக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்து வலுவான ஸ்கோரை எட்டியது.