பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றில் சீனாவைச் சேர்ந்த ஹுவாங் யா சியோங்கும் (Huang Ya Qiong) செங் சிவையும் (Zheng Siwei) தென் கொரியாவை வீழ்த்தித் தங்கப் பதக்கத்தை வென்றனர்.
தங்கப் பதக்கத்தை வென்ற பின்னர் சீனப் பேட்மிண்டன் அணியைச் சேர்ந்த லியூ யூசென் (Liu Yuchen) தம்மைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு ஹுவாங்கிடம் புரபோஸ் செய்தார். இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் கத்திஒ கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். இந்த திடீர் புரபோசலை சற்றும் எதிர்பாராத ஹுவாங் திகைத்துப் போனார்.
பின்னர் லியூ யூசென், அவருக்கு மோதிரத்தை அணிவித்தார். இதைக் கண்டு ஹுவாங்கினால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த இயலவில்லை. இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்த அருகில் இருந்தவர்கள் அதை இணையத்தில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.