சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சர்வதேச மற்றும் இந்தியா கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ளும் இரண்டாவது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 2வது சீசன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடரின் இரண்டாவது நாளில் 2வது சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாஸ்டர்ஸ் பிரிவு 2வது சுற்றில் முதல் போர்டில் ஈரான் கிராண்ட் மாஸ்டரான அமீன் தபதாபேயி, செர்பிய கிராண்ட் மாஸ்டரான அலெக்ஸி சரானா மோதினார்கள். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அமீன் தபதாபேயி 45வது நகர்த்தலின் போது வெற்றி கண்டார்.
விதித் குஜ்ராத்தி அதிர்ச்சி தோல்வி:
2வது போர்டில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான லெவோன் அரோனியனை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் அர்ஜுன் எரிகைசி விளையாடினார். இந்த ஆட்டம் 36வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது.
3வது போர்டில் இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜ்ராத்தி, ஈரான் கிராண்ட் மாஸ்டரான பர்ஹாம் மக்சூட்லூவுடன் மோதினார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய விதித் குஜ்ராத்தி 45வது காய் நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார். இது அவருக்கு 2வது தோல்வியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் விதித் குஜ்ராத்தி, அர்ஜுன் எரிகைசியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த் சிதம்பரம் டிரா:
4வது போர்டில் இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ்வுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அரவிந்த் சிதம்பரம் 23வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிரா செய்தார்.
7 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 2 சுற்றுகளின் முடிவில் மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ், அமீன் தபதாபேயி, அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். அரவிந்த் சிதரம்பரம், லெவோன் அரோனியன், பர்ஹாம் மக்சூட்லூ ஆகியோர் தலா ஒரு புள்ளியுடன் முறையே 4 முதல் 6வது இடங்களில் உள்ளனர்.
ஹரிகாவும் அதிர்ச்சி தோல்வி:
அலெக்ஸி சரானா 0.5 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார். விதித் குஜ்ராத்தி இன்னும் புள்ளி கணக்கை தொடங்கவில்லை. சேலஞ்சர்ஸ் பிரிவில் 2வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் முதல் போர்டில் லியோன் மெண்டோன்கா, ஹரிகா துரோண வல்லியுடன் மோதினார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா துரோண வல்லி 44வது நகர்த்தலின் போது அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஹரிகாவுக்கு இது 2வது தோல்வியாக அமைந்தது. முதல் சுற்றிலும் அவர், தோல்வியை சந்தித்து இருந்தார். 2வது போர்டில் அபிமன்யு புராணிக், பிரணவை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரணவ் 39வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதனால் அவர், முழுமையாக ஒரு புள்ளிளை பெற்றார்.
தரவரிசையில் யார் முன்னணி?:
கார்த்திக்கேயன் முரளி, பிரனேஷுடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆட்டம் 33வது நகர்த்தலின் போது டிரா ஆனது. ஆர்.வைஷாலி, ரவுனக் சத்வானியை சந்தித்தார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி 30வது காய் நகர்த்தலின் போது ஆட்டத்தை டிரா செய்தார்.
7 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 2 சுற்றுகளின் முடிவில் பிரணவ், லியோன் மெண்டோன்கா ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். ரவுனக் சத்வானி 1.5 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், அபிமன்யு புராணிக் 1 புள்ளியுடன் 4வது இடத்திலும், வைஷாலி 0.5 புள்ளியுடன் 5வது இடத்திலும், பிரணேஷ் 0.5 புள்ளியுடன் 6வது இடத்திலும், கார்த்திக்கேயன் முரளி 0.5 புள்ளியுடன் 7வது இடத்திலும் உள்ளனர்.
இதையும் படிங்க:கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: உலக அரங்கில் சாதிக்கத் தயாராகும் சென்னை வீரர்கள்!