ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள புங்கம்பள்ளி கிராமத்தில் 80 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் உள்ளது. அத்திகடவு அவினாசி திட்டத்தில் குழாய் பதிக்கப்பட்டு புங்கம்பள்ளி குளத்திற்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. பவானி நீரேற்று நிலையத்தில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீர் விநியோகம் செய்த நிலையில் தற்போது புங்கம்பள்ளி குளம் நிறையும் தருவாயில் உள்ளது.
இதற்கிடையே குளத்திற்கு தொடர்ச்சியாக தண்ணீர் வரத்து உள்ளதால் குழாய் மூலம் தண்ணீர் வெளியேறும் பகுதியில் அப்பகுதியில் உள்ள சிறுவர் சிறுமியர் குளித்து விளையாடி மகிழ்கின்றனர். மேலும் கிராம மக்கள் அத்திக்கடவு திட்ட தண்ணீர் வெளியேறும் பகுதியில் துணி துவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் தொடர்ச்சியாக தண்ணீர் விநியோகிக்கப்படுவதால் புங்கம்பள்ளி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த குளத்தில் நீர் நிறைந்திருப்பதால் புங்கம்பள்ளி, நல்லூர் வரை விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களை உள்ளடக்கிய அத்திக்கடவு அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம் வடிவமைக்கப்பட்டது. இந்த திட்டம் மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கை. கடந்த 1963ல் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என முதல்முறையாக சட்டசபையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பின் நடந்த ஒவ்வொரு சட்டசபை மக்களவை தேர்தல்களில் அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி திட்டம் நிறைவேற்றும் என வாக்குறுதி இடம்பெற்றது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டத்திற்கு தேவையான 1652 கோடி ரூபாயை ஒதுக்கினார். அவனாசியில் 2019 பிப்ரவரி 28இல் அவரது தலைமையில் அடிக்கல் நாட்டு விழாவும் பிரமாண்டமாக நடத்தது. பின் பணிகள் விறுவிறுப்பான துவங்கின. கடந்த 2021 சட்டசபை தேர்தலின்படி 80 சதவீத பணிகள் முடிவைக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பணிகள் தீவிரமாக பணி நடைபெற்றதால் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி இத்திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டதால் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.