தஞ்சாவூர்: 16 வயது சிறுமியை தனியான சந்திக்க வேண்டும் என அழைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைதான சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது தோழியைச் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (20) என்ற நபருடன் சிறுமிக்குப் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து, இருவரும் செல்போன் மூலமாக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த இளைஞர் சிறுமியிடம் தனிமையில் சந்தித்துப் பேச வேண்டும் என அழைத்ததாகவும், அதனை நம்பிய சிறுமி அரவிந்தை சந்திக்க, அப்பகுதியில் உள்ள சவுக்கு தோப்பிற்குத் தனியாகச் சென்றதாகவும், அப்போது இளைஞர் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் சீண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, அரவிந்தின் நண்பரான சரண் (20) என்பவரும் சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கோடிக்கணக்கில் மோசடி புகார் - தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரின் மைத்துனர் கைது!
அப்போது, சிறுமி கதறி அழுதுள்ளார். அந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சென்று பார்த்த போது, இருவரும் தப்பி ஓடி விட்டதாகத் தெரிகிறது். இந்த சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கன்னிகா தலைமையிலான போலீசார், தப்பியோடிய அரவிந்த் மற்றும் சரண் ஆகிய இருவரையும் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து, பிடிபட்ட இருவர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.