சென்னை: அஜித், த்ரிஷா ஜோடியாக நடித்து வரும் பிப்ரவரி 6ஆம் தேதி ’விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த புத்தாண்டு தினத்தன்று பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விடாமுயற்சி டிரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் பிப்ரவரி 6ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித், த்ரிஷா நடிப்பில் வெளியாகும் படங்களில் ஒரு சுவாரஸ்ய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித், த்ரிஷா இருவரும் கடந்த 2005இல் ‘ஜீ’ திரைப்படத்தில் முதல் முறையாக ஜோடியாக நடித்தனர். ஜீ திரைப்படம் 2005ஆம் ஆண்டு பொங்கல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு பின்னர், பிப்ரவரி மாதம் வெளியானது.
இதனைத்தொடர்ந்து இருவரும் ’கிரீடம்’, ’மங்காத்தா’, ’என்னை அறிந்தால்’ ஆகிய படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இந்த படமும் 2015ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளி வைக்கப்பட்டு, அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது.
அதேபோல் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அஜித், த்ரிஷா நடித்துள்ள மூன்று படங்கள் ஜீ, என்னை அறிந்தால், விடாமுயற்சி ஆகிய படங்கள் பத்து வருட இடைவெளியில் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' டிரெய்லர்... இணையத்தில் வைரல்! - YEZHU KADAL YEZHU MALAI TRAILER
இந்த வித்தியாசமான ஒற்றுமை ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இதனிடையே விடாமுயற்சி டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் விடாமுயற்சி படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இரண்டாவது சிங்கிள் ‘பத்திகிச்சு’ பாடலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், இந்த ஆண்டின் முதல் பெரிய படமாக விடாமுயற்சி வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகிறது.