ஐதராபாத்:18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இதில் பீகாரை சேர்ந்த 13 வயதான வைபவ் சூர்யவன்சியை ஒரு கோடியே 10 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் மிக இளம் வயதில் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர் என்ற சிறப்பை சூர்யவன்சி பெற்றுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் 30 லட்ச ரூபாய் அடிப்படை தொகையில் களமிறங்கிய வைபவ் சூர்யவன்சியை ஏலத்தில் எடுக்க டெல்லி கேபிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 1 கோடியே 10 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சூர்யவன்சியை தன்வசப்பட்டுத்தியது.
17 ஆண்டுகால வரலாற்றில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளப் போகும் மிகக் குறைந்த வயது வீரர் வைபவ் சூர்யவன்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் ஒப்பந்தப்படி அவருக்கு 13 ஆண்டுகள் 243 நாட்கள் வயதாகிறது. முன்னதாக 170 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அண்மையில் சூர்யவன்சி படைத்து இருந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வைபவ் சூர்யவன்சி சதம் அடித்து இருந்தார். 62 பந்துகளில் 14 பவுண்டரி 4 சிக்சர்கள் என 104 ரன்களை வைபவ் சூர்யவன்சி குவித்து இருந்தார். அப்போது அவருக்கு வயது 13 ஆண்டுகள் 188 நாட்கள் ஆகும்.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியை சேர்ந்த வைபவ் சூர்யவன்சி, ரஞ்சிக் கோப்பை விளையாடிய மிக இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ரஞ்சி கோப்பையில் அறிமுகமான போது அவரது வயது 12 ஆண்டுகள் 284 நாட்கள். இதன் மூலம் மிகக் குறைந்த வயதில் ரஞ்சிக் கோப்பைத் தொடரில் விளையாடிய யுவராஜ் சிங், சச்சின் தெண்டுல்கர் ஆகியோரின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் வைபவ் சூர்யவன்சியை பயிற்சி ஆட்டத்தில் விளையாட அழைத்து இருந்தன. இதில் நாக்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான் அணியின் பயிற்சி ஆட்டத்தில் ஒரே ஓவரில் 17 ரன்களை சூர்யவன்சி குவித்தார். முதல் மூன்று பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்டார். அதேபோல் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் பயிற்சி ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி இருந்தார்.