ஐதராபாத்:நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-க்கு 0 என்ற கணக்கில் இழந்தது. 12 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணி முதல் முறையாக இழந்தது. அதேபோல் 92 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் 3-க்கு 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்டோர் இணைந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோருடன் 6 மணி நேரமாக பல்வேறு விஷயங்களை விவாதித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த தோல்வி காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் மீது ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனிடையே பிசிசிஐ தரப்பில் விரைவில் ரிவ்யூ மீட்டிங் நடக்கும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி, தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோர் சந்தித்தனர். தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வீடியோ கால் மூலமாக மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இந்த ஆலோசனை சுமார் 6 மணி நேரம் வரை நீடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.