ஐதராபாத்:வங்கதேசம் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து, இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி நாளை (அக்.9) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தொடருடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முக்கிய வீரர் ஒருவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் மஹ்முதுல்லா தான் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருடன் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. 2021ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணியின் கேப்டனாக மஹ்முதுல்லா நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து அந்த சீசனில் வங்கதேச அணி தோல்வியை தழுவியதை அடுத்து அடுத்த ஆண்டு (2022) ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான வங்கதேச அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் நீண்ட நாட்கள் கழித்து மஹ்முதுல்லா, கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை வங்கதேச அணியில் இடம் பிடித்தார்.