கான்பூர்:இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போட்டியின் இடையே வங்கதேச ரசிகர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் கத்தி கூச்சலிடும் புலி வேடம் அணிந்து இருந்த நபரை அருகில் உள்ளவர்கள், மைதான ஊழியர்கள் மற்றும் போலீசார் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றுகின்றனர். தற்போது அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒன்றரை மணி நேரத்தில் பரபரப்பு:
உடலில் முதுகு மற்றும் அடிவயிறு ஆகிய பகுதிகளில் தாக்கப்பட்டதாக காயம் அடைந்த நபர் தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இருப்பினும், என்ன காரணத்திற்காக தாக்குதல் நடந்தது, உண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. அது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு ஆளான நபர் டைகர் ராபி என்றும் அவர், மைதானத்தின் ஸ்டான்ட் சி பகுதியில் அமர்ந்து இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. போட்டி தொடங்கிய ஒன்றரை மணி நேரத்தில் மழை காரணமாக மதிய உணவு அறிவிக்கப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு பின்:
தாக்குதலுக்கு ஆளான டைகர் ராபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். போட்டியின் நடுவே வங்கதேச ரசிகர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போதிய வெளிச்சமின்மை மற்றும் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
ஆட்ட நேர முடிவில் வங்கதேசம் அணி 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் குவித்து நிதானமாக விளையாடி வருகிறது. ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் கான்பூர் மைதானத்தில் இந்திய அணி விளையாடுகிறது.இதற்கு முன் கடைசியாக 2021ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:முதல் நாள் ஆட்டம் பாதியில் பாதிப்பு! மழையால் ரத்தாகுமா 2வது டெஸ்ட்? வானிலை அறிக்கை கூறுவது என்ன? - india vs Bangladesh match Cancelled