ஐதராபாத்:பாகிஸ்தான் - வங்கதேசம், இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த நிலையில் டெஸ்ட் வீரர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-க்கு 0 என்ற கனக்கில் பாகிஸ்தான் முழுமையாக இழந்தது.
வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் ஆட்டம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து பாபர் அசாம் வெறும் 54 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் காரணமாக டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் பாபர் அசாம் கடும் சரிவை சந்தித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் டாப் 10 வரிசையில் இருந்த பாபர் அசாம் முதல் முறையாக முதல் 10 வீரர்கள் வரிசையில் இருந்து வெளியேறினார். தற்போது பாபர் அசாம் 13வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். டாப் 10 வரிசையில் முகமது ரிஸ்வான் மற்றும் ஒற்றை ஆளாக பாகிஸ்தான் அணி சார்பில் 10வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் பாபர் அசாம் ஏறத்தாழ 2022ஆம் ஆண்டு டிசம்பருக்கு பின் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 16 இன்னிங்ஸ்களில் ஒன்றில் கூட பாபர் அசாம் அரை சதத்தை தாண்டவில்லை. அதேநேரம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.