பாரீஸ்:உலகின் விளையாட்டு திருவிழா என்று அழைக்கப்படும், ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆனால் இதுவரை இந்தியாவிற்கு 3 பதக்கங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்தநிலையில் ஆண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் சேபிள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
தொடக்கத்தில் கொஞ்சம் பொறுமையாக ஆரம்பித்த அவினாஷ், அதன் பிறகு இலக்கை நோக்கி விறுவிறு என ஓடினார். இதன் விளைவாக 8:15 வினாடிகளில் இலக்கை கடந்து 5வது வீரராக இடம் பிடித்தார். ஒரு வேளை இந்த போட்டியில் அவர் தோல்வியைத் தழுவி இருந்தால் ரீபிசேஞ் என்று சொல்லப்படும் 2ஆவது வாய்ப்பிற்கான போட்டியில் பங்கேற்கும் நிலை இருந்தது.
அதில் வெற்றி பெற்றால்தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறமுடியும். ஆனால் அதற்கு வாய்ப்பு அளிக்காமல் 5வது வீரராக இடம் பிடித்த அவினாஷ் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலமாக 3000மீ ஸ்டீபிள்சேஸ் ஹீட் பிரிவில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை சேபிள் படைத்துள்ளார்.
இந்த போட்டியில் மொராக்கோவைச் சேர்ந்த முகமது டின்டூஃப்ட் 8:10 வினாடிகளில் இலக்கை கடந்த முதல் வீரராக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். அவரை தொடர்ந்து எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஃபயர்வு 8:11 வினாடிகளில் கடந்து 2ஆம் இடம் பிடித்தார்.
மேலும், கென்யா சேர்ந்த கிபிவோட் 3ஆம் இடமும், மற்றும் ஜப்பானை சேர்ந்த கிபிவோட் 4வது இடமும் பிடித்தனர். இவர்களுக்கான இறுதிப் போட்டி இன்று மதியம் 1:10 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்ற மகளிருக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி 8ஆவது இடம் பிடித்து வெளியேறினார். அதோடு, அங்கிதா தியானி 5000மீ தடகளப் போட்டியில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சோதனைகளை கடந்து சாதனை படைத்த சிங்கப்பெண்.. இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத்!