ஹைதராபாத்:அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் ரவிச்சந்திரன் அஸ்வின் (38). தமிழ்நாட்டை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இந்திய அணியில் பல ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்.
அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் கோப்பையில் இடம்பெற்றிருந்த அஸ்வின் போட்டி முடிவடையும் முன்பே தனது ஓய்வை அறிவித்துவிட்டார். இது பல்வேறு விவாதங்களை கிளப்பியது. அஸ்வின் விடைபெற்ற அந்த டெஸ்ட் தொடருக்கு (பார்டர்-கவாஸ்கர்) தகுதியானவர் என்று கபில் தேவ் உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். இருப்பினும், அஸ்வின் தனது ஓய்வை குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இந்த நிலையில், யூடியூப் சேனலில் தனது ஓய்வை குறித்து அஸ்வின் மனம் திறந்து பேசியிருப்பது சோசியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மனம் திறக்கும் அஸ்வின்
''நான் இன்னும் பல கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன்... ஆனால், எந்த இடத்தில்? கண்டிப்பாக இந்திய டிரஸ்ஸிங் அறையில் இல்லை, வேறு எங்காவது விளையாட வேண்டும். விளையாட்டில் நான் நேர்மையாக இருக்க விரும்புகிறேன். நான் ஒரு பிரியாவிடை டெஸ்டில் விளையாட விரும்பினாலும், அந்த இடத்திற்கு தகுதி பெறவில்லை என்றால் நினைத்து பாருங்கள். எனது கிரிக்கெட்டில் இன்னும் பலம் இருப்பதாக நான் உணர்ந்தேன்''.